கோயா கட்லெட்
  • 460 Views

கோயா கட்லெட்

செய்முறை:

1/2 கிலோ உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி தேவையான அளவு உப்புத்தூள் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். ரஸ்க் அல்லது உலர்ந்த ரொட்டியைத் தூள் செய்து 2 கப் சேகரித்துக் கொள்ளவும். 1/2 கப் அளவு மல்லித்தழை, 1/4 கப் அளவு புதினா இலை, 4 பச்சைமிளகாய், 1 அங்குலம் இஞ்சி - இவற்றை மிகச்சிறியதாக நறுக்கிக் கொள்ளவும், 50 கிராம் காரட், ஒரு பெரிய வெங்காயம், 50 கிராம் பீன்ஸ், 1 டர்னிப் ஆகியவற்றையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். 1 மேஜைக்கரண்டி சிரகத்தை வறுத்து தூள் செய்து கொள்ளவும். 3 ரொட்டித் துண்டுகளை ஒரு கப் பாலில் நனைத்து, நன்றாக பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

கட்லெட்டின் உள்ளே வைக்கும் பூரணம் தயாரிக்க, ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சி 125 கிராம் கோயா செய்து கொள்ளவும். பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரிபருப்பு, திராட்சை ஒவ்வொன்றிலும் 25 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். நறுக்கியப் பீன்ஸ், காரட், டர்னிப் இவற்றை ஆவியில் வேக வைத்து, அதனுடன் நனைத்த ரொட்டித் துண்டுகளையும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இத்துடன் இஞ்சி, பச்சை மிளகாய், மல்லித்தழை, புதினா இலை, சிரகத்தூள், தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். வாணலியை மிதமாக காய வைத்து 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, கோயாவைப் போட்டு, பொன்னிறமாக வறுத்து இறக்கிக் கொள்ளவும். இத்துடன் காய்கறி கலவையையும், அரைத்த பருப்பு கலவையையும், தேவையான உப்பும் சேர்த்து மெதுவாக பிசைந்து கொள்ளவும்.


பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கைக் கிண்ணங்களாக செய்து, இதனுள் பூரணத்தை வைத்து கட்லெட்களாக செய்து ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 கப் சமையல் எண்ணெய் ஊற்றி, காய வைத்து கட்லெட்களைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்