லஸாக்னே
 • 351 Views

லஸாக்னே

தேவையான பொருட்கள்:

 • பாஸ்டா - 1/2 கிலோ
 • காய்கறிக் கலவை (விருப்பமான எதுவும்) - 1-1/2 கிலோ
 • உப்பு - தேவைக்கேற்ப
 • ஆலிவ் ஆயில் - சிறிது
 • பூண்டு - 50 கிராம்
 • தக்காளி விழுது - 200 கிராம் (கடைகளில் ரெடிமேடாக கிடைக்கிறது. அல்லது தக்காளியை வேகவைத்து, தோலெடுத்து அரைத்து வீட்டிலும் செய்யலாம்.)
 • ஒரிகனோ, தைம், ரோஸ்மெரி, துளசி - எல்லாம் சேர்த்துப் பொடித்தது - 50 கிராம் (இத்தாலியன் மசாலாவான இவை பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் ரெடிமேடாகவும் கிடைக்கிறது.)
 • பாதாம், பிஸ்தா, முந்திரி - சிறிது
 • சீஸ் - தேவைக்கேற்ப
 • நெய் - சிறிது
 • வெண்ணெய் அல்லது எண்ணெய் - சிறிது
 • ஜாதிக்காய் தூள் - சிறிது

ஒயிட் சாஸ் செய்ய தேவையானவை:

 • பால் - 1/2 லிட்டர்
 • மைதா - 200 கிராம்
 • வெண்ணெய் - 100 கிராம்

செய்முறை:

அடிகனமான ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை உருக்கி, மைதாவைச் சேர்த்து, கட்டி சேராமல் கிளறவும். மாவு வெந்ததும், பால் சேர்த்துக் கிண்டவும். சாஸ் பதத்துக்கு வந்ததும், எடுத்து ஆற வைக்கவும்.

லஸாக்னே செய்முறை:

பாஸ்டாவை தண்ணீரில் சிறிது வெண்ணெய் அல்லது எண்ணெய் விட்டு நூடுல்ஸ் மாதிரி வேகவைத்து, வடிகட்டித் தனியே எடுத்து வைக்கவும். விருப்பமான காய்கறிகளை வேக வைத்து, விழுதாக அரைக்கவும். அரைப்பதற்கு முன்பாக வேக வைத்த காய்கறியில் சிறிதளவை எடுத்துத் தனியே வைக்கவும். கடாயில் ஆலிவ் ஆயில் விட்டு, நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த காய்கறி விழுதைப் போட்டு, உப்பும் சேர்த்து கிளறவும். அடிபிடிக்காமல் இருக்க சிறிது சிறிதாக எண்ணெய் விட்டுக் கிளறவும். இந்தக் கலவையைக் கிளறும் பக்குவத்தில்தான் லஸாக்னேயின் சுவையே அடங்கியிருக்கிறது. மிகப் பொறுமையாக, கலவையில் உள்ள கடைசி சொட்டு தண்ணீர் வற்றும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பின்பு தக்காளி விழுதை அதில் சேர்க்கவும். அதுவரை தண்ணீர்வற்றி கெட்டியான கலவை, தக்காளி விழுது சேர்த்ததும் மீண்டும் தண்ணீர் விட்டுக்கொள்ளும். மறுபடி, அதைத் தண்ணீர் வற்ற நன்றாகக் கிளற வேண்டும். சுருளக் கிளறியதும், ஒரிகனோ, தைம், ரோஸ்மெரி, துளசி சேர்த்தரைத்த பொடியில் ஒரு சிட்டிகை சேர்த்துக் கிளறவும். தண்ணீர் முழுக்க வற்றியதும், வேக வைத்துள்ள பாஸ்டாவை சின்னத் துண்டுகளாக வெட்டி, கலவையில் சேர்ததுக் கலக்கவும். அத்துடன் ஊற வைத்து நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி சேர்க்கவும். கொஞ்சம் சீஸ், நெய் சேர்க்கவும்.

ஒரு ட்ரேயில் வெண்ணெய் தடவவும். அதன் மேல், கிளறி வைத்துள்ள காய்கறிக் கலவையை ஒரு விரல் தடிமனுக்குப் பரத்தவும். சீஸை லேசாகத் துருவவும், ஒரிகனோ கலந்த பொடியை ஒரு சிட்டிகை தூவவும். அதன் மேல் அரைத்துக் கிளறிய காய்கறி விழுதை இன்னொரு லேயர் பரத்தி, வேகவைத்த பாஸ்டாவால் மூடி, ஒயிட் சாஸ் ஊற்றி, நிறைய சீஸ் துருவிப் போட்டு, லேசாக சூடாக்கிய தக்காளி விழுதைத் தெளித்து, சிட்டிகைக்கும் குறைவாக ஜாதிக்காய் தூவி, மறுபடியும் ஒரிகனோ பொடியும் தூவி, அவனில் 25 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். ஆறியதும் பரிமாறவும்.

லஸாக்னேயை மொத்தமாகச் செய்து, ஆற வைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து 3-4 நாட்கள் வரை சாப்பிடலாம். முதல் நாள் செய்து, அடுத்தடுத்த நாட்கள் சூடாக்கிச் சாப்பிட்டால் வத்தக்குழம்பு எப்படி ருசிக்குமோ, அது போன்றதொரு அயிட்டம் இது.