பார்ட்டி சௌமெயின்
 • 330 Views

பார்ட்டி சௌமெயின்

தேவையான பொருட்கள் :

 • சோள மாவு - 1 1/2 மேஜைக் கரண்டி
 • தண்ணீர் - 6 கோப்பை
 • நூடுல்ஸ் - 1 கோப்பை
 • சமையல் எண்ணெய் - தேவையான அளவு
 • குடை மிளகாய் - 1
 • கேரட் - 1
 • கோஸ் - 1/4 கோப்பை
 • வெங்காயம் - 2
 • முளைவிட்ட பச்சைப் பயறு - 1 கோப்பை
 • அன்னாசிப் பழத் துண்டுகள் - 1/4 கோப்பை
 • மிளகுத் தூள் (வெள்ளை) - 1 தேக்கரண்டி
 • உப்பு - தேவையான அளவு
 • சர்க்கரை - 1 தேக்கரண்டி
 • பச்சைக் கற்பூரம் - 1/4 தேக்கரண்டி
 • சோயா ஸாஸ் - 1 1/2 மேஜைக் கரண்டி
 • பாதாம் பருப்பு - 1 தேக்கரண்டி
 • முந்திரிப் பருப்பு - 1 தேக்கரண்டி
 • வால்நட் - 1 தேக்கரண்டி

முன்னேற்பாடு - 1

சோள மாவை ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் அரைக் கோப்பை அளவு நீர் ஊற்றவும் - சிறிது உப்பு சேர்த்து நன்றாகக் கரைக்கவும். இக் கலவையைக் கொதிக்க விடவும்.

முன்னேற்பாடு - 2

இக் கலவை நன்றாகக் கொதித்தவுடன் நூடுல்களை அதில் போடவும். எட்டு நிமிடங்கள் இது வேகட்டும். பின், கீழே இறக்கி வைத்துத் தண்ணீரை வடித்து விடவும்.

முன்னேற்பாடு - 3

இந்தக் கலவையில் இப்போது அரைத் தேக்கரண்டி அளவு சமையல் எண்ணெயை விடவும். நன்றாகக் கலந்து ஆற வைக்கவும்.

முன்னேற்பாடு - 4

இவை நன்கு ஆறிய பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்தவுடன், இதில் நூடுல்களைப் போட்டு வதக்கவும். பின்னர் குழைந்து விடாமல், பறவைக் கூடு போல் இருக்க வேண்டும்.

முன்னேற்பாடு - 5

சுடச் சுட கொதி நீர் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். கீறப்பட்ட குடை மிளகாயை அதில் அமிழ்த்தி வைத்துவிட வேண்டும். பின்னர் பச்சை மிளகாயை வெளியில் எடுத்து, அதனுள்ளிருக்கக் கூடிய விதைகளை எடுத்து விட வேண்டும்.

முன்னேற்பாடு - 6

கேரட்டைக் கழுவி தோல் சிவிக் கொள்ளவும்.

முன்னேற்பாடு - 7

கொதிக்கும் நீரில் வெட்டப்பட்ட கேரட், நறுக்கப்பட்ட பீன்ஸ், துருவப்பட்ட கோஸ் இந்தக் கலவையை ஒன்றிரண்டு நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் தண்ணீரை வடித்து விடவும்

தயாரிப்பு முறை :

ஒரு வாணலியில் சமையல் எண்ணெயை விட்டு நன்றாகக் காய வைக்கவும். எண்ணெய் காய்ந்தவுடன் தயாராக வைத்திருக்கும் முளை விட்ட பச்சைப் பயறை எடுத்து அதில் போடவும். நன்றாக இரண்டு நிமிடங்கள் வதங்க விடவும்.

முளைப் பயறை உண்டாக்கும் விதம்

பச்சை பயறை நன்றாகக் கழுவி, அதை ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் ஒன்றரைக் கோப்பை நீர் விடவும். அன்றைய தினம் இரவு முழுவதும் அது நன்றாக ஊறட்டும். மறு நாள் காலையில் அதனை மீண்டும் நன்றாக கழுவி, தண்ணீர் சிறிதுமில்லாமல் வடித்துக் கொள்ளவும். இதனை ஒரு மெல்லிய துணியில் போட்டுப் பொட்டலமாகக் கட்டவும். அப்படியே இருண்ட இடத்தில் உயரமாகக் கட்டித் தொங்க விடவும். தினந் தோறும் இரண்டு தடவை, இரண்டு வேளை, அரைக் கோப்பைத் தண்ணீரை அதன் மேல் தெளித்து வரவும். மூன்று நாட்கள் வரை இவ்வாறு செய்யவும். அதன் பின் எடுத்துப் பார்க்கும் போது பயறின் நீளத்துக்கு முளை காணப்படும்.

கவனிக்க வேண்டிய விஷயம்:

ஒரு மேஜைக் கரண்டி பச்சைப் பயறை முளை விடச் செய்தால் - ஒரு கோப்பை பச்சைப் பயறு நமக்குக் கிடைக்கும். இதுதான் அளவை அறிந்து கொள்ளும் வழி.

தயாரிப்பு முறை தொடர்ச்சி :

வதக்கும் போது அனல் அதிகமாகவே இருக்க வேண்டும். இவ்வாறு இரண்டு நிமிடங்கள் வரையிலும் வதக்கவும். இதன் பின்னர் மீதி இருக்கக் கூடிய காய்கறிகளையும் அன்னாசிப் பழத் துண்டுகளையும், மிளகையும், உப்பையும், சர்க்கரையையும், பச்சைக் கற்பூரத்தையும் இதில் சேர்க்கவும்.
இவற்றை எல்லாம் மேலும் இரண்டு நிமிடங்கள் வரை வதக்கவும். இதன் பிறகு ஸோயா ஸாஸில் சிறிதளவு தண்ணீரை விட்டு நன்றாகக் கலந்து இக்கலவையை நன்றாகக் கொதிக்க விடவும். இதன் பிறகு சிறிதளவு சோளமாவைச் சிறிதளவு தண்ணீரில் கலந்து அந்தக் கலவையை அதில் அங்கங்கே தெளித்துக் கிளறிவிடவும். இப்படிச் செய்யும் போது சோளமாவுக் கரைசல் மற்றவற்றுடன் ஒட்டி ஒன்றுடன் ஒன்று சேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையானது நன்றாகக் கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவைக்கவும். இப்போது பரிமாறக் கூடிய பாத்திரத்தில் முதலில் நூடுல்களைப் பரவலாகப் பரப்பி வைக்கவும். அதன் பின், அதில் காய்கறிக் கலவையைக் கொட்டவும். அதன் மேல் பாதாம் பருப்பு - முந்திரிப் பருப்பு - வால்நட் பருப்பு ஆகியவற்றைப் பரவலாகத் தூவிப் பரிமாறவும். இந்தப் பார்ட்டி சௌ மெய்ன் மிகமிகச் சுவையானது

கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

ஃபாஸ்ட் ஃபுட் உணவு தயாரிக்கும் போது காய்கறிகளை அதிக அளவில் வேக வைக்கக் கூடாது.
கூடிய வரை பாதி வேக்காடு மிகவும் நல்லது.
ப்ரைட் ரைஸ் சாதத்தைத் தயாரிக்கும் போது அந்தச் சாதமானது சுடச் சுட இருக்கக் கூடாது.
நன்றாக ஆற வைக்கப்பட்டுப் பொலபொலவென்று இருக்க வேண்டும்.
பச்சைக் கற்பூரத்தை அதிக அளவில் உபயோகிக்கக் கூடாது. சிட்டிகை, கால் தேக்கரண்டி, என்ற அளவே போதுமானது.