பஞ்சாபி கட்லெட்
  • 1595 Views

பஞ்சாபி கட்லெட்

செய்முறை:

1/2 கிலோ உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, தேவையான உப்புத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். 4 பச்சை மிளகாய்களைச் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். 1/2 கப் அளவு கொத்தமல்லி தழையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். ரஸ்க் அல்லது உலர்ந்த ரொட்டியைத் தூள் செய்து 2 கப் சேகரித்துக் கொள்ளவும்.

கட்லெட்டின் உள்ளே வைக்கும் பூரணம் தயாரிக்க, 50 கிராம் முந்திரி பருப்பு, 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் சாரப்பருப்பு (சாரோலி), 50 கிராம் பிஸ்தா பருப்பு, 50 கிராம் திராட்சை ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.

1/2 கப் தேங்காய் துருவலையும் நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளவும். வறுத்த பருப்பு வகைகளுடன், தேங்காய் துருவல், தேவையான அளவு உப்புத்தூள், 2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி சிரகத்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கில் நறுக்கியப் பச்சை மிளகாய், மல்லி தழை, 2 தேக்கரண்டி மிளகாய்தூள் இவற்றைக் கலந்து, நன்கு பிசைந்து கொள்ளவும். உருளைக்கிழங்கு கலவையையும், பூரணத்தின் அளவையும் சமமாகப் பிரித்துக் கொள்ளவும், உருளைக்கிழங்கு கலவையைச் சிறிதளவு எடுத்து கிண்ணம் போல செய்து இதனுள் பூரணத்தைச் சிறிதளவு வைத்து ஓரங்களை மூடி ரொட்டித் தூளில் புரட்டி, இதன் நடுவே அக்ரூட் பருப்பு ஒன்றை மெதுவாக அமுக்கி வைத்துக் கொள்ளவும். இது போல் உருளைக்கிழங்கு கலவை முழுவதையும் செய்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 கப் சமையல் எண்ணெய் ஊற்றி, காய வைத்து, செய்து வைத்துள்ள கட்லெட்களை மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். கட்லெட்டின் நடுவே அக்ரூட் பருப்பு வைப்பதால் எண்ணெய்யில் போடும் போது கவனமாகப் போட்டு பொரிக்க வேண்டும். தக்காளி சாஸீடன் பரிமாறவும்.