சோயா பீன்ஸ்-உருளை பால்கறி
 • 651 Views

சோயா பீன்ஸ்-உருளை பால்கறி

தினம் தினம் என்ன காய் வைக்குறதுனு அம்மாக்களுக்கு ஒரே டென்ஷனா இருக்கும். கத்திரிக்காய், அவரைக்காய், கேரட், முட்டைக்கோஸ்னு அதையே வைச்சாலும் சலிப்பாக இருக்குது. அதே நேரத்துல விதவிதமா வைக்கணும்னு ஆசைதான் ஆனா...என்ன வைக்குறது யோசனை அப்படித்தானே.. இதோ உங்களுக்காகவே சோயா பீன்ஸ்-உருளை பால்கறி தயாரா இருக்கு...இதை ட்ரை பண்ணிப்பாருங்க! சோயால நிறைய புரோட்டீன் இருக்கறதால இது உடம்புக்கும் ரொம்ப நல்லது.

தேவையான பொருட்கள்:

 • உரித்த சோயா பீன்ஸ் - 1/4 கிலோ
 • உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
 • தக்காளி பெரியது - 3
 • பூண்டு பெரிய பல் - 4

அரைக்க:

 • தேங்காய் சிறியது - 1
 • பச்சைமிளகாய் - 6
 • சோம்பு - 1 டீ ஸ்பூன்
 • கசகசா - 1 டீ ஸ்பூன்

தாளிக்க:

 • எண்ணெய் - தேவையான அளவு
 • இலவங்கப்பட்டை - சிறிதளவு
 • ஏலக்காய் - 1
 • கிராம்பு - 1
 • சின்ன வெங்காயம் - 50 கிராம்
 • கருவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* சோயா பீன்ஸை அரை வேக்காடு வேக வைத்துக்கொள்ளவும்.

* தேங்காயை துறுவி அதோடு பச்சைமிளகாய், சோம்பு, கசகசா சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* பூண்டை தட்டி வைத்துக்கொள்ளவும்.

* இப்போது வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, வெங்காயம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

* தாளித்தவுடன் நறுக்கி வைத்த தக்காளி பழத்தை சேர்த்து வதக்கவும்.

* பின்பு அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை சிறிது நேரம் வதக்கவும்.

* பின்பு தேவையான தண்ணீ­ர் ஊற்றி அரை வேக்காடு வேக வைத்த பீன்ஸை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* அதோடு தட்டி வைத்த பூண்டை கொதிக்கும் பால்கறியில் சேர்க்கவும்.

* இப்போது நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
 
* கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கி இறக்கி வைத்த பால்கறியில் தூவவும்.

* கமகமக்கும் சோயா பீன்ஸ்-உருளை பால்கறி ரெடி.

* இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையுடன் இருக்கும்.

குறிப்பு: தேங்காயை நைசாக அரைக்காமலும், திப்பி திப்பியாக அரைக்காமலும் ஓரளவு நன்றாக அரைத்துக்கொள்ளவும். தேங்காய் பால் எடுத்துகூட செய்யலாம். பால் நல்ல திக்காக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.