தக்காளி தொக்கு
  • 420 Views

தக்காளி தொக்கு

தேவையான பொருட்கள்:

  • தக்காளி - 1 கிலோ
  • புளி - 1 எலுமிச்சம்பழ அளவு
  • மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  • பூண்டு - பெரியதாக 4 பல்
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • எண்ணெய் - 1/2 கப்
  • வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
  • பெருங்காயம் - 1 டீஸ்பூன்

செய்முறை:-

வெந்தயம், பெருங்காயம் இரண்டையும் வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். தக்காளியைக் கழுவித் துடைத்து, துண்டுகளாக நறுக்குங்கள். நறுக்கிய தக்காளியை மிக்ஸியில் போட்டு, அதனுடன் மிளகாய்த்தூள், புளி உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதை, அடி கனமான பாத்திரம் ஒன்றில் போட்டு, அடுப்பில் வைத்து கொதிக்கவிடுங்கள். கொதிக்க ஆரம்பித்ததும், அது வெளியே தெறிக்கும். இப்போதுதான் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் கொதிக்க ஆரம்பித்ததும், மூடியால் மூடிவிடுங்கள் (இல்லையெனில் கொதிக்கும் தொக்கு கைகளில் பட்டு, புண்ணாகும் வாய்ப்பு உள்ளது) அவ்வப்போது தீயைக் குறைத்துவிட்டு, மூடியைத் திறந்து கிளறுங்கள்.

தண்ணீர் ஓரளவுக்கு வற்றிச் சுருங்கியதும், மூடியை எடுத்துவிட்டு, ஓரளவுக்கு நடுத்தரத் தீயில் வைத்துக் கிளறிக்கொண்டே இருங்கள். அதே சமயத்தில் இன்னொரு அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, கடுகைச் சேருங்கள். கடுகு பொரிந்ததும் அதைத் தக்காளிக் கலவையில் சேருங்கள். பின் பூண்டை (தோல் உரிக்காமல்) நசுக்கிச் சேருங்கள். வெந்தயம், பெருங்காயத்தூளைச் சேர்த்து, சுருங்கக் கிளறி இறக்குங்கள்.