கோதுமை ரவா அல்வா
  • 86 Views

கோதுமை ரவா அல்வா

திருநெல்வேலிக்கே அல்வா கொடுப்பவர்கள் என்று செல்லமாகச் சொல்லும் அளவிற்கு பேர் போன தமிழர்களுக்கு பிரியமான ஸ்வீட் எது என்றால் சட்டென சொல்வது 'அல்வா' தான். பொதுவா அல்வா பிரியர்களுக்கு சுடச்சுட அல்வா சாப்பிடுவதில் தான் அலாதி பிரியம். செய்ய சற்று சிரமமாக இருக்கும், பொறுமையாகச் செய்ய வேண்டும். ஆனால் செய்த பின் சாப்பிடும் போது பட்ட கஷ்டம் எல்லாம் பறந்திடும். இந்த தீபாவளிக்கு பொறுமையாக கோதுமை ரவா அல்வா செய்து சுவையாக சாப்பிடுங்கள்!

தேவையான பொருட்கள்:

  • கோதுமை ரவா - 1 கப்
  • சர்க்கரை - 2 கப்
  • சர்க்கரை சேர்க்காத பால்கோவா - 1 கப்
  • நெய் - 1/2 கப்
  • ஏலக்காய் பொடி, முந்திரி, பாதாம் பருப்பு - தேவையான அளவு

செய்முறை:

* குக்கரில் நெய்யை ஊற்றி, அதில் கோதுமை ரவையை போட்டு குறைந்த சூட்டில் வறுக்கவும்.

* சிறிது தண்ணீ­ரை தனி பாத்திரத்தில் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* கோதுமை ரவை வாசனை வர ஆரம்பித்ததும், தீயின் அளவைக் குறைத்து, சூடான நீரை எடுத்து மாவில் ஊற்றவும்.

* தண்ணீ­ர் தெறிக்கும் அதனால் மெதுவாக ஊற்றவும்.

* பிறகு மூடி வைத்து, தீயின் அளவைக் குறைத்து வைத்து சுமார் 10 நிமிடங்கள் வேக விடவும்.

* பின்னர் சிறிதளவு தண்­ணீரை ஒரு வாணலியில் ஊற்றி சூடாக்கி, அதில் சர்க்கரை, துருவிய கோவா ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.

* ஆவி வந்ததும், அதில் கலவையைக் கொட்டி, குறைந்த அளவு வெப்பத்தில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறவும்.

* எல்லாம் ஒன்று சேர்ந்து கெட்டியாகி, திரண்டு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

* பிறகு அதில் ஏலப்பொடி சேர்த்து கிளறி விடவும்.

* இறக்கிய பின் அத்துடன் நறுக்கின முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரித்து, சூடாகப் பரிமாறவும்.